இலவச நூலக அங்கத்துவம் பெறுதல்

கெளரவ ஆளுநர் அவர்களின் அனுமதியின் பிரகாரம் உள்ளூராட்சி ஆணையாளர் வடக்கு மாகாணம் அவர்களின் பணிப்பிற்கு அமைவாக எமது சபையின் செயலாளர் அவர்களின் வழிகாட்டல் மற்றும் ஆலோசனைக்கு அமைவாகவும் 15.04. 2024ஆம் திகதியில் இருந்து எமது நூலகத்தில் இலவசமாக நூலக அங்கத்தவராக இணைந்து கொள்ள முடியும் எனவே வலிகாமம் வடக்கு பிரதேச சபை காங்கேசன்துறை உப அலுவலக எல்லைக்கு உட்பட்டவர்கள் எமது நூலகத்தில் இலவச நூலக அங்கத்துவ படிவத்தைப் பெற்று அங்கத்தவராக இணைந்து பயன் பெறுமாறு அனைத்து மாணவர்கள், வாசகர்கள், நலன் விரும்பிகள் அனைவருக்கும் அன்புடன் அறியத்தருகின்றோம்.(இன்றைய வாசகர் நாளைய தலைவர்.” Today a Reader tomorrow a Leader.”)

வாழ்வாதார உதவித்திட்டம் வழங்கல்

வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் வாழ்வாதார உதவித்திட்டத்தின் தொடர்ச்சியாக சபையின் வரவு செலவுத்திட்ட ஒதுக்கீட்டிற்கமைவாக வாழ்வாதார உதவிகளை வழங்குவதனூடாக “அனைத்து வடிவங்களிலும் உள்ள வறுமையினை ஒழித்தல்” என்ற நிலைபேறான அபிவிருத்தி இலக்கினை அடைந்து கொள்ளும் முகமாக சபை எல்லைக்குள் வதியும் வறுமைக்கோட்டிற்குட்பட்ட இரண்டு பயனாளிகளுக்கு கோழிக்கூடுகள் வழங்கி வைக்கப்பட்டன.

வீதிகளில் போக்குவரத்திற்கு இடையூறாக காணப்பட்ட பற்றைகள் துப்பரவு செய்யப்பட்டு வருகின்றது

வீதியோரத்தில் (சபை வீதிகள்) வீதியை ஆக்கிரமித்து போக்குவரத்திற்கு இடையூறாக பற்றைகள் காணப்பட்ட வீதிகளில் தெரிவு செய்யப்பட்ட வீதிகள் விசேட செயற்திட்டம் கட்டம் 1 இன் கீழ் துப்பரவு செய்யப்பட்டு வருகின்றது.

அனர்த்த முகாமைத்துவம் தொடர்பான செயலமர்வு

மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவால் சபை உத்தியோகத்தர்களுக்கு அனர்த்த முகாமைத்துவம் தொடர்பான செயலமர்வு நேற்றைய தினம் (2024.05.14) நடாத்தப்பட்டது.

சத்துமா வழங்கும் திட்டம் ஆரம்பம்

சபையின் நிர்வாகத்தின் கீழ் உள்ள நெய்தல் முன்பள்ளி மாணவர்களுக்கு 2024 வரவுசெலவுத்திட்ட முன்மொழிவிற்கமைய தினமும் பால் வழங்கப்பட்டு வந்த நிலையில் மேலதிகமாக சத்துமா வழங்கும் திட்டம் 2024.05.27 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கிராமிய நீர் விநியோக திட்டம் ஆரம்பம்

நீண்ட காலம் செயலற்றிருந்த வசந்தபுரம், சேந்தான்குளம் (இளவாலை) கிராமிய நீர் விநியோகமானது குறித்தொதுக்கப்பட்ட மாகாண அபிவிருத்தி நிதியினூடாக புனரமைப்பு மற்றும் விரிவாக்கம் செய்யப்பட்டு தற்போது நீர் விநியோக செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. எனவே பயனாளர்கள் பொறுப்புணர்வுடன் நீரை சிக்கனமாகவும், நீர்க்குழாய் மற்றும் கட்டுமானங்களை பாதுகாப்பாகவும் பயன்படுத்தி தொடர்ச்சியான நீர் விநியோகத்திற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கோருகின்றோம்.

சபைக்குச் சொந்தமான கடைகளை வாடகை ஒப்பந்தம் செய்தவர்களுடனான கலந்துரையாடல்

எமது சபையுடன் சபைக்குச் சொந்தமான கடைகளை வாடகை ஒப்பந்தம் செய்தவர்களுக்கு வாடகை ஒப்பந்த நிபந்தனைகள் தொடர்பிலும் வியாபார தன்மை, உப வாடகை, அனுமதியற்ற கட்டிட இணைப்புக்கள், விளம்பரப் பலகைகள், திண்மக் கழிவகற்றல் போன்ற பல்வேறு விடயங்களுக்கு கட்டுப்படவேண்டிய தேவைகள் தொடர்பிலான விளக்க கலந்துரையாடலுடன் கடைகளில் பின்பற்ற வேண்டிய சுகாதார நடைமுறைகள் தொடர்பிலும் 4.4.2024 அன்று கலந்துரையாடப்பட்டது.
இக் கலந்துரையாடலில் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் சபையின் உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
Translate »